உள்ளடக்கத்திற்கு செல்

வள்ளலார் ஆதியினம்

எதுவும் என்னால் இல்லை, எதுவும் எனது இல்லை, எல்லாமும் எல்லோருக்கும்

வள்ளலார் ஆதியினம் பற்றி

மரபு நெறி குரு பரம்பரை

தெய்வீக ஞானத்தின் புனித சங்கிலி

  1. எல்லாம் வல்ல சிவப்பரம் பொருளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவடிகளே சரணம்!
  2. இறைமையின் முதல் முதன்மை இயக்க களமாக வெளிப்பட்ட ஆதிமகாயோகி திருவடிகளே சரணம்!
  3. திருக்கயிலாய பரம்பரை ஆதிகுரு நந்தியம்பெருமான் திருவடிகளே சரணம்
  4. நந்தி அருள் பெற்ற திருமூல நாயனார் திருவடிகளே சரணம்!
  5. மூல சித்தர் காளாங்கிநாதர் திருவடிகளே சரணம்
  6. தவத்திரு போகர் சித்தர் திருவடிகளே சரணம்
  7. தவத்திரு கொங்கணர் சித்தர் திருவடிகளே சரணம்
  8. தவத்திரு சட்டநாதர் சித்தர் திருவடிகளே சரணம்
  9. தவத்திரு வாலை குருசாமி திருவடிகளே சரணம்
  10. தவத்திரு பாலையானந்தர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
  11. தவத்திரு ஜெய வீர ஆதி நாயக் சுவாமிகள் திருவடிகளே சரணம்
  12. தவத்திரு ஜோதி ராமசாமி தேசிகர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
  13. தவத்திரு ஸ்ரீ சிவகுருநாத தேசிகர் அவர்களின் திரு உள்ளத்தில் எழுந்தருளி எங்களின் அறியாமை இருளைப் போக்கிய மரபு வழி குருமார்களையும், திருஞானசம்பந்தர் மரபில் உதித்து உலகு உயிர் திரளெல்லாம் ஒளிநெறி பெற்றிட உயரிய போதனைகள் தந்த திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் திருவடிகளையும், மனம் மொழி மெய்களால் வணங்குகின்றோம்.

வள்ளலார் ஆதியினத்தின் செயல்பாடு

எங்கள் இறைப்பணி

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கை என்னும் அனுபவப் பயணத்தில் தவறுகளை திருத்திக் கொண்டு, துன்ப துயரங்களிலிருந்து விடுபட்டு, நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கும், மனிதன் தனக்குள் இருக்கும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உணர்வின் வழியாக வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் எல்லா உயிர்களையும் இயக்கி கொண்டிருக்கும் அறிவு வடிவான இறைவனை உணர வைப்பதே எங்கள் இறைப்பணி.

வள்ளலார் ஆதியினத்தின் இலக்கு

எங்கள் இலக்கு

மனிதன் தன் சுயத்தை (சத் + சித் + ஆனந்தம்) உணர்வதற்கான சன்மார்க்க கல்வியை (நாயகன்-நாயகி பாவனை), தொன்மை குருகுல மரபு வழியாக உலகெங்கும் பரப்புவதே எங்களின் இலக்கு.

தொன்மை குருகுல மரபு வழி ஞான உபதேசகர்

ஸ்ரீ சிவகுருநாத தேசிகர்

ஸ்ரீ சிவகுருநாத தேசிகர்

எங்கள் குருநாதர் ஸ்ரீ சிவகுருநாத தேசிகர் அவர்கள் மிக சிறு வயது முதலே வள்ளல் பெருமானை மானசீக குருவாக ஏற்று, உள்ளுணர்வு வழியாக இறைவனோடு தொடர்பு கொண்டு பல்வேறு பிரபஞ்ச பேருண்மைகளை வழங்கி வருகிறார்.

மனித இயக்கம், மனித வாழ்க்கையின் நோக்கம், பிறப்பு இறப்பு ரகசியங்களையும், மரணமில்லா பெருவாழ்வுக்கான உளவுகளையும், ஜீவன், ஆன்மா, இறைவன், பிரபஞ்சம் பற்றிய பேருண்மைகளையும், அவைகளுக்கு இடையே உள்ள தொடர்புகள் பற்றிய அரிய ரகசியங்களையும் உபதேசமாக குருகுல வகுப்பில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

உள்ளுணர்வு ஆளுமையில் இறைவன் இயங்கும் களமாக இயங்கி பிரபஞ்ச பேருண்மைகளை வள்ளலார் ஆதியினம் என்ற அமைப்பின் மூலம் உலகிற்கு வழங்கி வருகிறார். பக்குவம் அடைந்தவர்களுக்கு திருவடிஞானம் மற்றும் திருவடி தீட்சையையும் வழங்கி வருகிறார்.

வாருங்கள்!

குருவருள், திருவருள், பேரருளால் அறியாமை இருளை நீக்கி, ஒளிநெறி எனும் உயரிய ஞானத்தை உணர்வோம்!!

தெய்வீகக் கொள்கை குறியீட்டின் சிறப்பு

ஒளிநெறி பயணத்தின் அடையாளம்

வள்ளலார் ஆதியினம் கொள்கை குறியீடு

ஒரு ஞானாசிரியரின்‌ (குரு) இயல்புகள்‌ எப்படி இருக்கும்‌ என்பதை சுட்டிக்‌ காட்டும்‌ குறியீட்டு வடிவம்‌ தான்‌ “தென்முக கடவுள்” (தக்‌ஷணாமூர்த்தி) வடிவம்‌. அந்த வடிவமும்‌, அமைப்பும்‌ போதிக்கும்‌ போதனைகள்‌ விரிவானவை. இவைகளில்‌ ஆதிமூல முக்கிய போதனையின்‌ குறியீடு தான்‌ “சின்முத்திரை”.

சின்முத்திரை: ஒளிநெறி பீடத்தின்‌ கொள்கை குறியீடு “சின்முத்திரை”. “சின்‌” என்பது பேரொளி (அருட்பெருஞ்ஜோதி). பேரொளியின்‌ இயக்க இயல்பு பேரறிவு. இதுவே அனைத்திற்கும்‌ ஆதிமூலம்‌. “முத்திரை” என்பதற்கு அடையாளம்‌ என்று பொருள்‌. மூன்று திரைகள்‌ (மறைப்புகள்‌) என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. இந்த குறியீடானது அதில்‌ உள்ள பேருண்மைகளை எப்படி வெளிப்படுத்துகின்றன என்பது விரிவானது.

உன்னுள்‌ ஒளி; உணர்ந்து தெளி: இந்த இறைநிலை இயல்பே நம்‌ மனித இயக்கத்தில்‌ ஆதிமூல தூண்டல்‌ மையமாக அமைந்து உள்ளது, என்பதை குறிக்கும்‌ சொல்லே “உன்னுள்‌ ஒளி” என்பது. இந்த தூண்டலை உணர்வினால்‌ பற்றி நின்று, இயங்கி தெளிவு அடைவதே மனித இயக்க அமைப்பின்‌ நோக்கம்‌. இதை உணர்த்தும்‌ சொல்‌ “உணர்ந்து தெளி”.

பரிவு, பணிவு, பகிர்வு: இயற்கை அமைப்பில்‌ எல்லா இயக்கங்களும்‌ மூன்று மையங்களை கொண்டிருக்கின்றன. அவை தூண்டல்‌ நிலை மையம்‌, செயல்நிலை மையம்‌, தொடர்பு நிலை மையம்‌. முதிர்ச்சி பெற்ற மனித இயக்கத்தில்‌ இந்த மூன்று மையங்களும்‌ அருள்‌ தூண்டல்‌, ஆன்ம இயக்கம்‌, சார்பின்‌ தொடர்பு என்ற வடிவில்‌ அமைந்துள்ளது. இந்த மூன்று மையங்களின்‌ தூய்மையையும்‌, செயல்நிலைகளையும்‌ குறிக்கும்‌ சொல்லே “பரிவு, பணிவு, பகிர்வு”.

திருவாட்சி: சின்முத்திரையை சுற்றி அமைந்துள்ள சுடர்விடும்‌ வட்டத்தின்‌ பெயர்‌ “திருவாட்சி". திரு + அட்சி (கண்). அதாவது தூய்மை மிகுந்த கண்ணொளி. இது நம் முன்னோர்கள்‌ மரபு வழியாக பயின்றுவரும்‌ திருவடி ஞானத்தை குறிக்கும்‌ குறியீடு.

ஏழு சுடர்கள்‌: ஏழுவகையான அலைநிலை இயக்கங்களை குறிப்பதே ஏழு சுடர்கள்‌. வட்ட வடிவில்‌ அமைந்துள்ள திருவாட்சியில்‌ உள்ள சுடர்கள்‌ ஏழு. இந்த பிரபஞ்ச பேரியக்கம்‌, அலைநிலை வடிவானது. இந்த அலைநிலை வடிவத்தில்‌ தூண்டல்‌ நிலையாக இருப்பது ஒளி (அறிவு), செயல்நிலையாக இருப்பது ஒலி (இயங்குதல்‌). இவை இரண்டின்‌ கலவைதான்‌ இந்த பிரபஞ்ச அலைநிலை இயக்கம்‌. இந்த அலைநிலை இயக்கமானது அதிநுண்மை முதல்‌ பருமை வரை ஏழு நிலைகளை கொண்டது.

சூரியன்‌: நாம்‌ இந்த பூமியை மையமாக கொண்டு வாழ்கின்றோம்‌. பூமி சூரியனை மையமாக கொண்டு சுழல்கின்றது. சூரிய கதிர்களால்தான்‌ உலக உயிர்கள்‌ வாழ்கின்றது. இந்த சூரிய வழிப்பாட்டை நம்‌ முன்னோர்கள்‌ நீண்ட காலமாக பயின்று வருகின்றார்கள்‌. அதுதான்‌ “காயத்ரி மந்திரம்‌" (சூரிய ஒளிக்கு ஒளியை தருகின்ற பெருஞ்ஜோதியை வணங்குகின்றேன்‌;) இந்த சூரிய ஒளியே இயக்கத்திற்கு வந்த அருட்பெருஞ்ஜோதி.

ஒம்‌: ஒம்‌ என்பது அகரம்‌, உகரம்‌, மகரம்‌ ஆகிய மூன்று ஒலிகளின்‌ கூட்டு இயக்கம்தான்‌ “ஒம்‌”. இந்த மூன்று ஒலிகளும்‌ பிரபஞ்ச ஆதி இயக்கங்களுடைய அலைநிலை ஒலி. தூண்டல்நிலை மைய ஒலி “அ”, செயல்நிலை மைய ஒலி “உ”, தொடர்புநிலை மைய ஒலி “ம்‌” என்பது ஆகும்‌.

ஒளிநெறி பீடம்‌: நம்‌ முன்னோர்கள்‌ மரபு வழியாக பின்பற்றி வந்த ஒளிநெறி மார்க்கத்தை உலகம்‌ உணரும்‌ வகையில்‌ கொண்டு செல்லும்‌ பீடம்‌ “ஒளிநெறி பீடம்‌”.