உள்ளடக்கத்திற்கு செல்

வள்ளலார் ஆதியினம்

எதுவும் என்னால் இல்லை, எதுவும் எனது இல்லை, எல்லாமும் எல்லோருக்கும்
கட்டுரைகளுக்கு திரும்பு

26 மே, 2026

மனித சமுதாயம் மனிதத்தன்மை அடைந்து தெளிவாவதற்கான வழி என்ன?

ஆலய வழிபாடுகள் மூலம் அடைந்த தேவைகளுக்கான உடைமைகளும், ஆசிரமங்கள் மூலம் அறிந்த அறியாமைக்கான அறிவு விளக்கமும் மனிதனை திருப்திப்படுத்த முடியவில்லை. தேடும் பொருளாகவே இருந்தது. அதாவது அவன் அறிந்ததும், அடைந்ததும் முழுமையானதாக இல்லை. அறியாமையை நீக்கிக் கொள்வதற்காக மேலும் மேலும் அவனுக்குள் அறிய தூண்டியது எது? தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மேலும் மேலும் அவனுக்குள் அடைய தூண்டியது எது? இவற்றில் தெளிவில்லாத நிலையே இன்றைய மனிதனின் தெளிவின்மைக்கு காரணம்.

அவன் தேடுகின்ற முழுமையான அறிவுத் தெளிவும், சுகநீட்சியும் (சுகம் நீடித்திருப்பது) அவனுக்குள்ளாகவே இருக்கின்றது. அவனுக்குள்ளாக இருக்கின்ற ஒன்றை அவனுக்கு வெளியே இருக்கின்ற வேறொன்றால் தேடி அடைய முடியாததை மனிதன் உணர்கின்றான். அது வடிவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனுக்குள் இறைமையாக இருக்கின்றது. அவனுக்குள் அறியத் தூண்டிய இறைமையானது “மனசாட்சி” ஆகவும், அடையத் தூண்டிய இறைமையானது “உள்ளுணர்வு” ஆகவும் வடிவெடுத்து இருக்கின்றது.

இந்த இரண்டுடனும் தொடர்பு ஏற்பட்டால், அதாவது உறவு ஏற்பட்டால், தெளிவில்லாத மனிதன் முழுமையான மனிதனாக மாறி அமைவான். உறவு ஏற்பட்டு, உறவில் முதிர்ச்சி பெற்றால் முழுமையான மனிதன் மாமனிதனாக உயர்வடைவான். இதுதான் ஞானிகள் பயணித்த பாதை. இதுதான் இறைவன் வகுத்த பாதை.