29 மே, 2026
ஆன்ம சுய இயல்பை மலம் எப்படி தடைப்படுத்தியது? மலத்தின் தன்மை, அதன் விளக்கம் என்ன?
இறைமையின் ஆளுமையை ஏற்று, அந்த இறை இயல்பை தன் சுய இயல்பாக கொண்டு இயங்கும் ஆன்மா நித்தியமானது. பிறப்பு இறப்பு இல்லாதது. அவ்வாறு இறை இயல்பில் இயங்கி பேரசைவுடன் இனையவேண்டிய ஆன்மாவை எல்லைப் படுத்தி, இயங்க விடாமல் தடைப்படுத்தியது மூல மலம்.
மலம் என்பது அறிவு, அசைவு, ஆற்றல், வேகம், விரிவு என்ற எந்த தன்மையும் இல்லாத ஜடம். பிரபஞ்சம் முழுவதும் பரவியிருக்கின்ற இருள் துகள்கள். தத்துவ நூல்களில் இதனை பிரக்ருதி என்பர். இன்றைய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் DARK ENERGY என்பது இதை குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். காற்று பெரும் புயலாக வடிவெடுக்கும் போது, அசைவற்று கிடந்த பொருட்களெல்லாம் சிதைந்து பறப்பது தெரியும். அங்கு அசைவற்ற பொருட்களெல்லாம் அசைவதாக தோன்றுவது பொய். அதனை போன்றதுதான் மலத்தின் அசைவும். அசைவற்ற மல இருள் துகள்களின் ஊடாக பேரசைவு விரைந்து பயணிக்கும் போது ஏற்பட்ட விளைவுதான் "மல அசைவு".
புயல் காற்றில் சிதைந்து பறந்த பொருட்கள் பூமியின் ஈர்ப்பு விசையால் ஆங்காங்கே முறையற்று குவிந்து விடுவதை போன்று, ஆன்மாவின் ஈர்த்தல் தன்மையால் இருள் துகள்கள் ஈர்க்கப்பட்டு, ஆன்மா மீது வந்து படிகின்றன. மலப் படிவுகளால் தன் இயல்பை வெளிப்படுத்திட முடியாத ஆன்மாக்கள் தான் ‘ஜீவன்’ என்றும் ‘உயிர்’ என்றும் அழைக்கப்படுகின்றது. இவைகள் உரு பெறா உயிர்கள். உரு பெறா ஜீவன்கள் பஞ்ச பூத அணுக்களாக வடிவெடுத்து உறைநிலை உயிர்களாக தோன்றுவதுதான் ஜீவனுக்கான முதல் பிறப்பு.
பிறப்பெடுத்த ஆன்மாக்கள் அதாவது உயிராகிய ஜீவர்கள் தனித்த இயக்கமாக வடிவெடுக்கும் போது, அவைகளுக்கு மூன்று மையங்கள் அமைந்து விடுகின்றன. ஜீவனுக்கு மூன்று மையங்கள் அமைந்திருப்பதால், ஜீவன் மீது படிந்திருந்த மூலமலமும் மூன்றாக பிரிந்து இயங்குகின்றது. அவைகள்:
- அறிவு வடிவான தூண்டல் மையம். இதனை தடைப்படுத்தும் மலத்திற்கு ஆணவ மலம் என்று பெயர்.
- அசைவு வடிவான செயல் மையம். இதனை முரண்படுத்தும் மலத்திற்கு கன்ம மலம் என்று பெயர்.
- பகிர்வு வடிவான தொடர்பு மையம். இதனை மறைக்கும் மலத்திற்கு மாயா மலம் என்று பெயர்.
மூன்று வகை மலங்களும் முறையே ஜீவசுதந்திரம், போக சுதந்திரம், தேக சுதந்திரம் என்ற வடிவெடுத்து பிறப்பிற்கு விதையாகின்றது. இந்த மூன்று மலங்களும், முற்றிலும் நீங்கி பிறப்பற்ற நிலை வரும் வரை பிறப்பு தோறும் மலம் தொடர்வதால், இதனை மூலமலம் என்று கூறலாம். இவைகளின் பக்குவங்களுக்கு ஏற்பவே அதாவது இவைகள் நீங்குவதற்கு ஏற்பவே பிறப்புக்கள் மாறுவதும், குறைவதும் நிகழ்கின்றன.