27 மே, 2026
நமது முன்னோர்கள் ஆலயங்கள், ஆசிரமங்கள் இவற்றை ஏற்படுத்தியதன் பயன்பாடு என்ன?
தொன்மை காலத்தில் அகத்தூண்டலாகிய அறிவுத் தூண்டலையும் மற்றும் அசைவுத் தூண்டலையும் கற்றுத்தரும் குறியீட்டு வடிவங்களையும், வழிபாட்டு முறைகளையும் ஆலயங்களிலும் ஆசிரமங்களிலும் அமைத்துத் தந்து இருந்தார்கள். இப்போது அது போன்ற அமைப்புக்கள் வழக்கொழிந்து போய்விட்டது. இன்றைய கால கட்டத்தில் ஆலயங்களிலும் ஆசிரமங்களிலும் வியாபார நோக்கம் பெருகிப் போய்விட்டது. ஆனாலும் மனிதன் ஆலயங்களுக்கும், ஆசிரமங்களுக்கும் செல்வதன் மூலமாக இளைப்பாறுதல் அடைகின்றான்.
ஆன்மீக பயணத்தில் பயணிக்க விரும்புவோர், ஒரு பயனை அனுபவிக்க முடியாமல் போகும்போது தளர்ந்து போய்விடுவார்கள். அப்படி சோர்ந்து தளர்ந்து போகாமல், அவர்களுடைய பயணத்தில் ஒரு இளைப்பாறுதலை தர வேண்டும் என்பதற்காகவே, இறைமை செய்து வைத்த ஏற்பாடுதான் ஆழ்மனப் பதிவு. (ஆழ்மனப் பதிவு விளக்கம் தொடர்ந்து வரும் கட்டுரைகளில் பதிலாக இருக்கும்)
ஒருவன் ஆசிரமங்களையும் (குருமார்களை), ஆலயங்களையும் (தெய்வங்களை) எந்த அளவுக்கு உறுதியாக ஏற்றுக் கொண்டு நம்புகின்றானோ, அந்த அளவுக்கு அவனுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். அது தற்காலிக இளைப்பாறுதல் மட்டுமே, தொடர்ந்து நீடிக்காது.இளைப்பாறுதல் நீடிக்க வேண்டுமென்றால் அகம் நோக்கி திரும்ப வேண்டும். அதற்கு, இறைவன் வகுத்த ஞானிகள் பயணித்த பாதையில், அவன் பயணிக்க வேண்டும். இது இயல்பு தூய்மை மற்றும் பக்குவ முதிர்வை ஏற்படுத்தும்.
ஆழ்மனம் தரும் இளைப்பாறுதல் நித்தியமற்றது. இயல்பு தூய்மை மற்றும் பக்குவ முதிர்வு மட்டுமே நித்தியமான நிறைவை தரும். இதற்கு வாழ்வியல் முறையில் மாற்றம் தேவை.
இயக்க ஒழுங்கு, எதிர்மறை எண்ணம் நீக்கம், நேர்மறை எண்ணங்களுடன் இயங்குதல், இருப்பதை ஏற்றல், எஞ்சியதை ஈதல், தேவைகளுக்கு எல்லை வகுத்தல் ஆகிய இவை போன்றவைகளே வாழ்வியல் மாற்றங்கள். இதனை செய்ய விரும்பாதவர்கள், இளைப்பாறுதலை மட்டும் தேடி அலைவார்கள். இவர்கள் மிகையாக இருப்பதால், இவர்களுக்கான இளைப்பாறுதல் மையங்களும் ஏராளமாக தோன்றின.