உள்ளடக்கத்திற்கு செல்

வள்ளலார் ஆதியினம்

எதுவும் என்னால் இல்லை, எதுவும் எனது இல்லை, எல்லாமும் எல்லோருக்கும்
கட்டுரைகளுக்கு திரும்பு

25 மே, 2026

பக்தி என்ற பெயரில் கோவில்களிலும், ஞானம் என்ற பெயரில் ஆசிரமங்களிலும் கூட்டம் பெருகியுள்ளது. ஆனால் மனித சமுதாயம் மனிதத் தன்மையை இழந்து தெளிவற்று போனதற்கு காரணம் என்ன?

அணு முதல் அண்டம் வரை உள்ள அனைத்துமே இயக்கங்கள். எல்லா இயக்கங்களும் இயங்கும் தன்மையோடு உள்ளன. இயங்குவதால் அவைகள் இயக்கம். மனிதர்களாகிய நாமும் ஒரு இயக்கம். நமக்கு மற்ற இயக்கங்களை இயக்கும் திறனும் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு இயக்கமும் இன்னொன்றின் துணை இன்றி இயங்க முடியாது. அதில் மனித இயக்கமும் அடங்கும். மனிதன் இயங்க அவனுக்கு இன்னொன்று தேவை. அவனுக்கான இன்னொன்றாக உயிர் உறவுகளையும், உடைமை உறவுகளையும் நினைக்கின்றான். இந்த இரு உறவுகளையும் தேடி அலைகின்றான் அலைந்து தேடியவைகளை கொண்டு செயல் தெளிவின் மூலம் இன்பத்தையும், அறிவுத் தெளிவின் மூலம் நிறைவையும் அடைய முயலுகின்றான்.

உயிர் உறவுகள் என்றால் மனிதனுடன் உறவுக்கொள்ளும் உயிர் இயக்கங்கள் என்றும், உடைமை உறவுகள் என்றால் மனிதனுக்கு உதவும் உயிரற்ற அனைத்து பொருட்கள் என்று புரிந்துக் கொள்ளலாம். உறவுகளை தேடி அடையும் முயற்சியில் எதிர்பார்த்த பயன் கிடைக்காமல் போய்விடுகின்றது. அதாவது முயன்று பெற்ற இன்பம் தொலைந்து போகின்றது மற்றும் நிறைவு நீங்கிவிடுகின்றது.

தன்னுடைய முயற்சியால் மட்டும் அதை அடைய முடியாது என்பதையும் தன்னை விட அறிவு நிறைந்ததாகவும், செயல் சிறந்ததாகவும், அறிவாளியாகவும் இருக்கின்ற ஒன்றின் துணையோடுதான் அதை அடையமுடியும் என்பதையும் ஆராய்ச்சியாலும், அனுபவத்தாலும் உணர்கின்றான். அவ்வாறு உணர்ந்து, அதற்கு இறைவன் என்ற பெயர் வைத்து, அதை வணங்க ஆலயங்களை அமைத்தான். அந்த ஆலயங்களை கொண்டு அவனுக்கு தேவையானதை தேட முயற்சி செய்தான்.

செயலில் தெளிவை அடையமுடியாமல் போனவன், தேவைக்கான உடைமைகளை இறைவனின் உதவியோடு அடைந்து இன்பத்தை நிலைவாட்ட முயன்றான். ஆலயங்களுக்குச் சென்று தேவைகளை அடைந்தாலும் மீண்டும் தேவைகளை தேட வேண்டும் என்ற நிலைக்கு ஆளாகின்றான். அடுத்து அறிவில் நிறைவை அடையமுடியாமல் போனவன், அவன் முயற்சியில் தோல்வியை கண்ட பிறகு, அறிவில் நிறைவ்டைவதற்காக அறிவில் முதிர்ந்த பெரியோர்களை தேடி ஆசிரமத்துக்கு செல்கின்றான். ஆசிரமத்தில் அவன் தேடிய நிறைவு கிடைத்தாலும், கிடைத்த நிறைவு தொடர முடியாமல் போய்விடுகின்றது.

இப்படி தேவை பெருக்கத்தின் மூலம் செயலில் தெளிவையும், அறிவுப் பெருக்கத்தின் மூலம் அறிவில் நிறைவையும் பெறமுடியாத மனித சமுதாயமானது மனிதத் தன்மையை இழந்து தடுமாறி தெளிவற்று போனது.